திருகோணமலை மாவட்டம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் அமைப்பு பணியாளர்களின் விசாரணைகளை அனைத்துலக நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான ஆதரவுகளை பிரான்ஸ் அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்த்து வருவதாக பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் பட்டினிக்கு எதிரான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்துலக விசாரணைகளுக்கு தேவையான அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளை திரட்டுவதற்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளுக்கான ஆதரவுகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வந்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் ஏற்ற பின்னர், இது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுக்கள் பிரான்ஸ் அரச அதிகாரிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளன.
"மூதூர் படுகொலைக்கான நீதி" என்ற பட்டினிக்கு எதிரான அமைப்பின் போராட்டம் பிரான்ஸ் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனவே அனைத்துலக விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் அதிகரித்துள்ளன.
இதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு முன்னெடுத்து வரும் போதும் எமது அமைப்பும் அனைத்துலகத்தின் கவனத்தைப்பெறும் வண்ணம் தனது போராட்டத்தை அனைத்துலக ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வரும்.
இதற்கான நடவடிக்கைகளை நாம் படிப்படியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். முதலில் பிரான்ஸ் அரசாங்கத்திடமே கோரிக்கைகளை விடுத்துள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 17 ஆம் நாள் இந்த போராட்டத்தை பட்டினிக்கு எதிரான அமைப்பு ஆரம்பித்திருந்தது.
மூதூர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக தெரிவித்த பட்டினிக்கு எதிரான அமைப்பு, இலங்கையிலிருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
Tuesday, June 24, 2008
மூதூர் படுகொலை: அனைத்துலக விசாரணையை எதிர்நோக்கும் சிறிலங்கா
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டு
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று திங்கட்கிழமை (23.06.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, சிறிலங்கா அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசின் வெளிப்படையான இரகசியமான நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால் அது மேலும் தெளிவாகத் தெரிய வருகிறது.
2008, ஜூன் 20 ஆம் நாள் வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்புச் செயலாளர் திரு.விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழு, சிறிலங்கா அரசுடன் இருதரப்புச் செய்திகளையும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு சென்றடைந்ததாக இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது.
அங்கு சென்ற இந்தியக் குழு, அந்நாட்டு அரச தலைவர் திரு.மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.கோத்தபாய ராஜ்பக்சவையும், அதிபரின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க அவர்களையும் சந்தித்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. அவர்களின், பயணம் ஒரு பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரச தலைவர் அலுவலகத் தரப்பில் ஆதாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியில், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இங்கு வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழு இலங்கைத் தீவின் பாதுகாப்பு அம்சங்கள், வடக்குப் பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல், வடமேற்கு இலங்கைக் கடற்பகுதியில் ஊடுருவும் இந்திய மீனவர்கள் பிரச்சினை, மேலும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாடு தொடர்பான செய்திகள் உள்ளடக்கிய பல்வேறு செய்திகளையும், பிரச்சினைகளையும் விவாதிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டும் வரும் சிறிலங்கா இனவாத அரசுக்கு இந்த அரசு செய்யும் எல்லாவித இராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நேரிலும், கடிதம் மூலமாகவும் நான் மீண்டும், மீண்டும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது, சிறிதும் அக்கறையின்றி பொறுப்பற்ற முறையில் தூக்கி வீசப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 ஆம் ஆண்டில் இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும்- இந்திய அரசு, சிறிலங்கா அரசுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தளபாடங்களையும் வழங்கி அந்நாட்டு இராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை செய்வதற்குண்டான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும்: பா.நடேசன்
சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு மாவீரர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும் மாவீரர்கள் எந்த குறிக்கோளுக்காக வாழ்ந்தார்கள் எந்த குறிக்கோளுக்காக தமது உயிர்களை ஈர்ந்தார்கள் என்பதனை நினைவு கூர்வது அவசியமாகும்.
துச்சாதரனின் போராட்ட வாழ்வை எடுத்துப் பார்ப்போமானால் 9 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப்பணியை முன்னெடுத்துச் செல்பவராக அவர் இருந்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்வதற்கு பல களமுனை வெற்றிகள்தான் காரணமாக இருந்துள்ளது.
அரசியல் நகர்வுகள், களமுனை நகர்வுகள், இராஜதந்திர நகர்வுகள் எனப் பல நகர்வுகள் வெற்றியைத் தீர்மானித்தாலும் சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள், திருப்புமுனைகள் தான் எமது போராட்டத்தின் வெற்றியை தீர்மானித்திருக்கின்றன.
மேஜர் துச்சாதரனின் போராட்ட வாழ்வில் பல களச்சமர்கள் வெற்றி கொள்வதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளன.
போர் முனையில் வேவுப்பணியை தொடராகச் செய்ததன் மூலம் சண்டைகள் பல வெற்றிகொண்டதற்கு இவர் முதன்மைப் பங்கு வகித்துள்ளார்.
அதிகளவு காலம் சிறிலங்காப் படைத்தளங்களுக்குள் இவரின் காலம் கழிந்திருக்கின்றது. அற்புதமான வெற்றிகளைப் பெறுவதற்கு மேஜர் துச்சாதரனின் பங்கு முதன்மையானது.
இன்றைய சூழலில் சிறிலங்காப் படையினர் பல போர்முனைகளில் போர்களைத் தொடுத்திருந்தாலும் தமிழினம் ஒரணியில் திரள்வதன் மூலம் வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
மேஜர் துச்சாதரனின் நினைவு நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு சிறப்புத்தளபதி சசிக்குமார் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.
மேஜர் துச்சாதரனின் திருவுருவப்படத்தினை தளபதி கேணல் ஜெயம் திரை நீக்கம் செய்தார்.
துச்சாதரனின் உடன்பிறப்பு அலெக்சின் துணைவியார் சுயதர்சினி சுடர்ஏற்றி மலர்மாலைச் சூட்டினார்.
மலர்மாலையினை விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகி சூட்டினார்.
விழாச்சுடர்களை மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் கண்ணன், கல்விக்கழக துணைப் பொறுப்பாளர் புலிமறவன் ஆகியோர் ஏற்றினர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், மாவீரர் நடனம் என்பன நடைபெற்றதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையினை துச்சாதரன் கல்வி நிலைய ஆசிரியர் சங்கரன் ஆற்றினார்.
தலைமையுரையினை ஆசிரியர் தர்சன் நிகழ்த்தினார்.
நினைவுரையை சமர் ஆய்வுப் பொறுபபாளர் யோகி ஆற்றினார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை பா.நடேசன், தளபதி கேணல் ஜெயம், சசிக்குமார், யோகி அருண் ஆசிரியர் ஆகியோர் வழங்கினர்.
அரங்கில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், இசை நிகழ்ச்சி ஆகியன இடம்பெற்றன.
நன்றி: புதினம்
மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல்: 3 காவல்துறையினர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறை கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:15 மணியளவில் ஆற்றில் குளிக்கச் சென்றுகொண்டிருந்த போது இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் எஸ்.எச்.சந்தான, பி.எம்.சமீர மற்றும் ரி.இந்திக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த கே.அமில என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற பகுதியானது ஆயித்தியமலை காவல்துறையினரின் காவலரணிலிருந்து 400 மீற்றர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
Monday, June 23, 2008
வவுனியாவில் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 18 படையினர் பலி- 31 பேர் காயம்- 3 உடலங்களும் படைப்பொருட்களும் மீட்பு
வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர்.
இதில் படையினர் இருமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் காலை 7:00 மணியளவில் முறியடிக்கப்பட்டன.
ஒருமுனையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்புத் தாக்குதல் இன்று பிற்பகல் 3:45 மணிவரை நீடித்தது.
இம்முனையும் பின்னர் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இம் முறியடிப்புத் தாக்குதலில் 18 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 31 படையினர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் 3 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடுமையாக சிதைந்துள்ளன.
ரி56-2 ரக துப்பாக்கிகள் - 03
பைகள் - 03
தண்ணீர் கொள்கலன்கள் - 06
ரவைக்கூடுதாங்கி அணிகள் - 03
ரவைக்கூடுகள் - 08
மற்றும் ரவைகள் கைக்குண்டுகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.
நன்றி: புதினம்
களுவாஞ்சிக்குடியில் சிறிலங்காப் படையினரால் 2 குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை- 10 பேர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான தாக்குதலில் 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரில் பழுகாமத்தைச் சேர்ந்த சிவராஜா இராஜேந்திரன் (வயது 22) என்ற இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 25 வயதுடைய மற்றைய இளைஞர் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இருவரும் குடும்பஸ்தவர்கள் எனவும் கட்டடத் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகின்றது.
களுதாவளை நாகதம்பிரான் ஆலய உற்சவ நிகழ்வு நடைபெற்ற வேளையில் கிளைமோர்த் தாக்குதல் நடைபெற்றது.
இதில் 2 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்தே சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்த படையினர், வீடு வீடாக தேடுதல் நடத்தி பொதுமக்களை மிகக்கடுமையாகத் தாக்கியதாகவும் 100-க்கும் அதிகமானோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் தொவிக்கப்பட்டது.
நன்றி: புதினம்
Friday, June 13, 2008
மன்னார் பெரியமடு நோக்கிய படையினரின் ஆக்கிரமிப்பு முறியடிப்பு : 20 படையினர் பல
மன்னார் பெரியமடுப்பகுதியூடாக சிறீலங்கா படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நான்குமுனைகளின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிநோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலெறி சூட்டாதரவுடன் பெரியமடு குளகட்டு பகுதியின் இடதுகரையூடாக முன்னகர முற்பட்ட படையினரை கடுமையாக சுமார் 8 மணிநேரத்திற்கு அதிகமாக முன்னகர முடியாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.
இதேவேளை பெரியமடு குளத்தின் தென்பக்கமாகவும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றதாகவும் இதனை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல்களை தொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.
மற்றுமொரு அணியினர் பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கியும் டாங்கிகள் சகிதம் முன்னகர்வினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்னமும் இருமுனைகளில் மோதல்கள் இட்பெற்றுவருவதாகவும் படையினர் பொறிவெடிகளிலும் விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதல்களிலும் சிக்கி பாரிய உயிரிழப்பை சந்தித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை காயமடைந்துள்ள படையினரை சிறீலங்கா படையினரின் உலங்கு வானுர்திகளில் இருந்து பலதடவைகள் களமுனையினை விட்டு அகற்றும் முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுவருதாகவும் அறியமுடிகிறது.
இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 20ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக சிறீலங்காப் படையினர் தாக்குதல் நவடிக்கைகளை இன்று திங்கட்கிழமை நிறுத்தியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.